கார்வழி அணை||சின்னமுத்தூர் தடுப்பனைகள்||19ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெற எளிய வழி||
#noyalcheck dam #karvazhi #muthur #anjur #karur #aathupalayam dam #kuppam #rainwater #noyyal #tiruppur #kovai #siruvani
பொங்கி அழித்த காட்டாற்றின் பயணம்...
கத்தாங்கண்ணியிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரத்துப்பாளையம் அணையும், அங்கிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சின்னமுத்தூரில் தடுப்பணையும் 1992-ல் திறக்கப்பட்டன. இவ்விரு அணைகளும் நொய்யலின் குறுக்கே கட்டப்பட்டுள்ளன.
சின்னமுத்தூர் அணையின் வலது பக்கமிருந்து பிரியும் வாய்க்கால் நொய்யலுக்கு சுமார் 2 கிலோமீட்டர் இடைவெளியில் 5 கிலோமீட்டர் தொலைவு பயணித்து கார்வழி ஊராட்சி ஆத்துப்பாளையம் கிராம நீர்த்தேக்கத்தை அடைகிறது.
ஒரத்துப்பாளையம் அணை ரூ.16.46 கோடியிலும், சின்னமுத்தூர், ஆத்துபாளையம் அணைகள் மற்றும் அதைச் சார்ந்த பணிகள் ரூ.13.51 கோடியிலும் முடிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள அறிவிப்புப் பலகையில் இதுகுறித்த பல்வேறு விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
ஒரத்துப்பாளையம் அணையின் நீளம் 2.290 கிலோமீட்டர். நீர் பரப்பு 423 ஹெக்டேர், நீர்ப்பிடிப்பு பரப்பு 2245. 53 சதுர கிலோமீட்டர். அணையின் கொள்ளளவு 17.44 மில்லியன் கன மீட்டர்.
சீமைக் கருவேல மரங்கள்
தற்போது அணையின் மொத்த பரப்பும் சீமைக்கருவேல மரங்களால் நிறைந்துள்ளன. அதன் நடுவே சின்னஞ்சிறு சாக்கடைக் கால்வாய்போல கறுப்பு, செம்பழுப்பு நிறத்தில் செல்கிறது நொய்யல் ஆறு.
அணையின் கரைகள், ஏரிகள், சிமென்ட் தளங்கள், கான்கிரீட் வாய்க்கால்கள் சிதிலமடைந்துக் காணப்படுகின்றன. அணைப் பகுதியில் பல அறைகள் இருந்தாலும், பாதுகாப்புக்கு காவலர் இல்லை. ஏரிக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. அணை மேல்பகுதி சாலையின் இருபக்க கதவுகளும் நிரந்தரமாக பூட்டப்பட்டுள்ளன.
இங்கிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சின்னமுத்தூர் தடுப்பணையின் மதகுகளும் திறந்தேதான் உள்ளன. ஆங்காங்கே நொய்யல் நீர் குட்டைபோல தேங்கி, துர்நாற்றம் வீசிக்கொண்டிருக்கிறது.
இதன் கதவுகளும் திறந்து, மூட முடியாத வகையில்தான் இருந்துள்ளன. வெள்ளம் வந்தால் அணைக்கு ஆபத்து ஏற்படும். அருகில் உள்ள நிலங்களில் வெள்ளம் புகுந்துவிடும் என்று விவசாயிகள் தெரிவித்ததையடுத்து, அண்மையில் ரூ.7 கோடி மதிப்பில் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
ஒரத்துப்பாளையம் அணையில் நொய்யல் நீர் தேக்கிவைக்கப்பட்டு, சுற்றுவட்டாரத்தில் உள்ள 500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். அங்கிருந்து சின்னமுத்தூர் தடுப்பணைக்கு தண்ணீர் திறக்கப்படும்.
சின்னமுத்தூர் தடுப்பணையிலிருந்து பிரியும் வாய்க்கால்கள் மூலம் மேலும் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கார்வழி ஆத்துப்பாளையம் அணைக்கு தண்ணீர் செல்லும். பிறகு, ஆத்துப்பாளையம் அணை வாய்க்கால் மூலம் கரூர் மாவட்டம் பஞ்சாமாதேவி வரை பிரதான மற்றும் கிளை வாய்க்கால்கள் மூலம் (சுமார் 40 கிலோமீட்டர்) பாசனம் நடைபெறும். இதுவே, இந்த 3 அணைகள் கட்டப்பட்டதன் நோக்கமாகும்.
சின்னமுத்தூர் வாய்க்கால் நீர் சென்றுசேரும் கார்வழி ஆத்துப்பாளையம் அணையும் நீண்டகாலமாக பராமரிப்பின்றி உள்ளது. ஏறத்தாவ 10 ஆண்டுகளுக்கு மேல் இந்த அணைக்கு தண்ணீர் வராமல் இருப்பதால், அணையின் ஏரிக்கரை சாலைத் தடுப்புகள் உருக்குலைந்துக் கிடக்கின்றன. தற்போது அங்கு புதிதாக சுற்றுச்சுவர் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த அணையில் பரவிக்கிடக்கும் முள் மரங்களை வெட்ட பொதுப்பணித் துறையினர் ஏலம் விட்டுள்ளனர். அணையின் ஒற்றை வாய்க்கால் செல்லும் பிரம்மாண்ட மதகுப்பகுதி துருவேறி, அணைக்குள் உடைந்து விழும் நிலையில் உள்ளது. அதைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை.
அதேபோல, கார்வழி முதல் பஞ்சாமாதேவி வரையுள்ள 50 கிராமப் பகுதிகளில் பிரியும் வாய்க்கால் மதகுகள் பழுதடைந்துள்ளன. அவற்றையும் சீரமைக்கவில்லை.
ஆனால், சின்னமுத்தூர், கார்வழி அணைகளை மட்டும் செப்பனிடுவது குறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “சலவை, சாய ஆலைக் கழிவுகள் ஆற்றில் வருவதால்தான், இந்த அணைகளில் தண்ணீர் தேக்கக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனினும், மழைக் காலங்களில் ஆற்றில் வெள்ளம் வரும்போது, சுத்தமான நீரை சின்னமுத்தூர் தடுப்பணையில் மறித்து, கார்வழி அணையில் தேக்கிவைக்கலாம். அதை அவ்வப்போது பாசனத்துக்கும் திறந்துவிடலாம். ஆற்றில் கழிவுகள் வரும்போது மட்டும் சின்னமுத்தூர் தடுப்பணையைத் திறந்து, அந்த நீரை ஆற்றில் விட்டுவிடலாம் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதற்காகவே இந்த ஏற்பாடு” என்று தெரிவித்தனர்.

எதிர்ப்பும்... ஆதரவும்…
அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு, விவசாயிகள் தரப்பில் பெருமளவு எதிர்ப்பும், சிறிதளவு ஆதரவும் உள்ளது. இதுகுறித்து ஒரத்துப்பாளையம் நொய்யல் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் எஸ்.தங்கவேலு கூறியது:
10 ஆண்டுகளுக்கு முன் அணையில் நிரந்தரமாக தண்ணீரைத் தேக்கிவைத்திருந்தபோது, அணையிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிணற்றின் நீரில் 7,000 முதல் 10,000 டிடிஎஸ் உப்புத்தன்மை இருந்தது. விவசாயிகள் போராட்டத்தாலும், நீதிமன்ற உத்தரவாலும் அணை நிரந்தரமாக திறந்துவைக்கப்பட்டது. இதையடுத்து, டிடிஎஸ் அளவு 4,000 முதல் 5,000 வரை மட்டுமே இருந்தது. அணைக்கு அருகில் கிணற்றில் 15,000 முதல் 17,000 டிடிஎஸ் வரை இருந்த உப்புத்தன்மை, தற்போது 7,000 முதல் 10,000 டிடிஎஸ்-ஆக குறைந்துள்ளது.
இந்தப் பகுதிகளில் பெரும்பாலும் தென்னை சாகுபடி நடக்கிறது. தென்னையைக் காப்பாற்றுவதற்காக ஆற்றில் வரும் கழிவுநீரையே பயன்படுத்துகிறார்கள். எனினும், அந்த நீரில் உள்ள சலவை, சாய மாசு மீண்டும் நிலத்திலேயே தங்கி, கிணறு உள்ளிட்ட நீர்நிலைகளிலும் பரவுகிறது. மீண்டும் ஆற்று நீரை பயிருக்கு பாய்ச்சும்போது பக்கத்து நிலத்திலும் மாசு பரவுகிறது.
இவ்வாறு, காங்கயம் வரை நிலத்தடிநீர் தொடர்ந்து வீணாகிறது. தற்காலிக தேவைக்கு தண்ணீர் கேட்டும் விவசாயிகள் இதை புரிந்துகொள்வதில்லை.